”தேவைப்பட்டால் வினேஷ் போகத்துக்கு கூடுதல் நிதியுதவி”..!! மத்திய அமைச்சர் பரபரப்பு பேச்சு..!!
ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளித்துள்ளார்.
33-வது ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த வீராங்கனை உள்பட 3 பேரை முறியடித்த வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இன்று இறுதிச்சுற்றில் விளையாட இருந்த நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். எனவே, இந்த பிரிவில் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மக்களவையில் இன்று விளக்கம் அளித்தார். இதுகுறித்து பேசிய அவர், “இன்று அவரது எடை 50 கிலோ 100 கிராம் என கண்டறியப்பட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வினேஷ் போகத்துக்கு சிறந்த பயிற்சியாளர், ஆலோசகரை கொடுத்துள்ளோம்.
இந்த விவகாரத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறார். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா பாரிஸில் இருக்கிறார். அவரிடம் பேசி, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். வினேஷ் போகத்துக்கு தேவைப்பட்டால் கூடுதல் நிதியுதவி வழங்கப்படும்” என தெரிவித்தார்.