’என் கணவர் அடிக்கடி இதை சொல்வார்’..!! ’என் கண்ணு முன்னாடியே’..!! உருகிய நடிகை மீனா..!!
நடிகை மீனா இன்றைய தினம் தன்னுடைய 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ஆம் ஆண்டு இறந்தார். இதனால் உடைந்து போன மீனா, தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில், என்னை எல்லோரும் வேலையில் மிகவும் ஒழுக்கமானவள், அர்ப்பணிப்போடு உழைப்பவள் என்றெல்லாம் சொல்கிறார்கள். சிறிய வயதில் நான் அப்படி இருந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அந்த சமயத்தில் என்னுடைய அம்மா எனக்கு முன்பாகவே எழுந்து என்னை தயார்படுத்துவார். எனக்கு எந்த விதத்திலும் அவர் கஷ்டம் கொடுக்காமல் 100% உறுதுணையாக இருந்தார். அம்மா மட்டுமல்ல அப்பாவும் என்னுடைய தொழிலுக்கு துணையாக இருந்தார்.
இருவருமே எனக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள். இந்த சமயத்தில் நான் இரண்டு பேரை இங்கு மிகவும் மிஸ் செய்கிறேன். ஒன்று என்னுடைய அப்பா, இன்னொன்று என்னுடைய கணவர். அவர்கள் என்னுடன் இருந்திருந்தால் முதல் சீட்டில் உட்கார்ந்து என்னை ரசித்து இருப்பார்கள். அவர்கள் இப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். கணவர் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்த பிறகு நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். எப்போதும் உன்னுடைய அம்மாவை சார்ந்து இருக்கக் கூடாது. தைரியமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்.
ஷூட்டிங்கிற்கு தனியாகச் செல் என்பார். அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு தான் வெளியுலகம் என்றால் என்ன என்பதை நான் தெரிந்து கொண்டேன். எனக்கு 'நோ' சொல்ல கற்றுக் கொடுத்தார். என்னுடைய மகள் மிக மிக குறைவாகதான் பேசுவாள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவள் பேசுவதை பார்க்கும்போது, இவள் இவ்வளவு அழகாக பேசுவாளா? என்று எனக்கு தோன்றியது" என்று பேசினார்.
மீனாவின் மகள் அம்மா மீனா பற்றி பேசுகையில், ”அம்மா மிகவும் கடினமாக உழைப்பாளி. வீட்டுக்கு வந்தால் அம்மாவாக மட்டுமே இருப்பார். அந்த இடத்தில் ஒரு கதாநாயகியாக இருக்க மாட்டார். நான் ஒரு வெற்றிகரமான மனிதராக இருந்து உங்களை பெருமைப்படுத்துவேன். உங்களுக்கு நான் பெரியதாக ஏதாவது ஒன்றை வாங்கி தருவேன். அது ஒரு மிகப்பெரிய வீடு என்பதை நான் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அப்பா இறந்த பிறகு அம்மா மிகவும் சோகமாகிவிட்டார். அதிலிருந்து அவரை வெளியே கொண்டுவர நான் முடிந்தவரை உதவி செய்தேன். அம்மா பலமுறை என் முன்னே அழுது இருக்கிறார்கள். ஆனாலும், பரவாயில்லை என்று சொல்லி இருவரும் அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே வர முயற்சி செய்வோம். அந்த சமயத்தில் நான் எனது அம்மாவுக்கு பரிசு ஒன்றை கூட வாங்கி கொடுத்தேன். குழந்தையில் இருந்து நீங்கள் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். இனி நான் உங்களை நன்றாக பார்த்துக் கொள்வேன். நிறைய டிவி சேனல்கள் எனது அம்மாவை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதில் சில பிரபலமான டிவி சேனல்கள் உண்டு. தயவு செய்து இது போன்ற தகவல்களை வெளியிட வேண்டாம். எனக்காக இதை நிறுத்திக் கொள்ளுங்கள். அம்மா ஒரு கதாநாயகி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அவரும் ஒரு மனிதர் தான். அவருக்கும் உணர்வுகள் உண்டு” என்று தெரிவித்தார்.
Read More : நாளை பொது விடுமுறை..!! இதெல்லாம் இயங்காது..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!