Kanguva | எதற்கு இத்தனை நெகட்டிவ் விமர்சனங்கள்.. இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா? - கொந்தளித்த ஜோதிகா
கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டே அவதூறு பரப்பப்படுகிறது என நடிகை ஜோதிகா வேதனை தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 14 ஆம் தேதி (14.11.2024) பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக படம் முழுக்க அதிகமாக சத்தம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.
சமூகவலைதளங்களில் கங்குவாவை பாகுபலியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தனர். அதாவது பாகுபலி குதிரையில் ஹீரோ செல்லும் காட்சியையும் கங்குவா படத்தில் சூர்யா குதிரையில் செல்லும் காட்சியையும் பாதி பாதியாக போட்டு இது பாகுபலி என்றும் இதை பாக்குறவன் பலி என்றும் கங்குவாவை விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில்தான் நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: கங்குவா படம் குறித்து சூர்யாவின் மனைவியாக இல்லாமல் சினிமாவை நேசிப்பவராக நான் சில விஷயங்களை சொல்லிக் கொள்கிறேன். முதலில் சூர்யாவை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் உங்கள் கனவை நனவாக்கியுள்ளீர்கள்.
கண்டிப்பாக கங்குவா படத்தில் முதல் அரைமணி நேரம் சப்தம் பிரச்சினையாகவே இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். மொத்தம் 3 மணி நேரம் வெளியான கங்குவா படத்தில் ஒரு அரை மணி நேரம்தான் அப்படியிருக்கிறது. தமிழ் சினிமாவில் இது போல் கேமரா பயன்பாடுகளை பார்த்ததே இல்லை. பெரிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் நன்றாகவே இல்லாத படங்களுக்குகூட இத்தகைய விமர்சனங்கள் வந்ததில்லை.
ஆனால் ஊடகங்களில் இருந்து கங்குவாவுக்கு எதிராக இது போன்று எதிர்மறையான விமர்சனங்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். பெண்களை இழிவாக சித்தரித்து இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட படங்களுக்கு கூட இப்படி விமர்சனங்கள் வந்ததில்லை. படம் வெளியான முதல் நாளே இது போன்று அவதூறுகள் பரப்பப்பட்டன.
கங்குவா படத்தில் இருந்த நல்ல விஷயங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? படத்தின் இரண்டாம் பாதியில் பெண்களுக்கு ஸ்கோப் இருக்கிறது. சிறுவனின் அன்பு, கங்குவாவின் பழிக்கு பழி போன்றவை எல்லாம் உங்களுக்கு தெரியவில்லை. ஒரு படத்தை விமர்சனம் செய்யும் போது நல்ல விஷயங்களை எல்லாம் மறந்துவிடுகிறீர்கள்.
படம் வெளியான முதல் நாளே கங்குவா குறித்து நெகட்டிவ் கமெண்ட்டுகள் வெளியானது வருத்தமளிக்கிறது. 3 டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கங்குவா படக்குழு எடுத்த முயற்சிகளுக்கும் படத்தின் கான்செப்ட்டுக்கும் பாராட்டுகளை தெரிவிக்காமல் எதிர்மறை விமர்சனம் ஏன், குறைகள் இல்லாமல் படம் எடுக்க முடியாது.அதற்காக ஒட்டுமொத்த படத்தையும் குறைக் கூற கூடாது. கங்குவா படம் குறித்த எதிர்மறை விமர்சனங்களை படக்குழுவினர் புறந்தள்ள வேண்டும் என ஜோதிகா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Read more ; பதிவு செய்யாமல் வீடு, மனை விற்றால் அபராதம்..!! – ரியல் எஸ்டேட் ஆணையம் அதிரடி