பாலியல் புகார்.. நமக்குள்ளே பேசிக்கலாம்.. மீடியா வேண்டாம்..!! - நடிகர் சங்கம் போட்ட 7 தீர்மானம்
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மலையாள சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடப்பது உண்மைதான் என்று ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை மலையாளத்தில் பெரிய பூகம்பத்தை கிளப்பிய நிலையில், அடுத்தடுத்து நடிகர்கள் மீதும், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்களை நடிகைகள் முன்வைத்து வருகின்றனர்.
இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக தமிழ் சினிமா நடிகைகள் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் இதுகுறித்து நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.. ஹேமா கமிட்டி அறிக்கை தமிழ் திரையுலகிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பொதுவெளியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சம்ங்கம் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாலியல் புகார் உறுதியானால் திரைத் துறையில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரை செய்ய தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் தி.நகர், நாம் பவுண்டேஷன் அரங்கில் இன்று (04.09.2024) காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.
பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ -மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும். மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read more ; ப்ரோ.. ஒரு ரவுண்டு போலாமா? ஸ்டாலினிடம் கேட்ட ராகுல் காந்தி.. ஜாலியா பதில் சொன்ன முதலமைச்சர்..!!