"ஆள விடுங்கடா.. அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம்."! ரஜினிகாந்த் அதிரடி முடிவு.!
அரசியலுக்கு வருவேன், மாட்டேன் என்று மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், தற்போது அரசியல் குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதில் அளிப்பதை தவிர்க்கிறார். தனது மகள் இயக்கிய லால் சலாம் படத்தை பற்றி பேசிய அவர், நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்த கருத்தினை கேட்டபோது அந்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.
தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த், அடுத்த அரசியல் கட்சி தலைவராக வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவ்வப்போது கட்சி தொடங்குவதாக அறிவிப்பை வெளியிடும் அவர், பின்பு பல காரணங்களை கூறி அந்த எண்ணத்தை கைவிட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று தனது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் நடித்து வெளியான லால் சலாம் திரைப்படம் பற்றி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார். அந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மக்களுக்கு பிடித்துள்ளதாகவும், படம் வெற்றி பெற்றதற்கு படக்குழுவிற்கும், தயாரித்த லைக்கா ப்ரொடக்சன் நிறுவனத்திற்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
பின்னர் நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷாலும் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளதை பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து அவரது கருத்து என்ன என்று கேட்டபோது, "சாரி, அரசியல் குறித்த கேள்விகள் வேண்டாம்" என்று பதில் அளிக்க மறுத்துவிட்டார். சமீபத்தில் 'சங்கி' என்ற வார்த்தையை வைத்து அவருக்கும் அவரது மகள் ஐஸ்வர்யாவுக்கும் எழுந்த பிரச்சினையால் இந்த முடிவா என்று, பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.