மாணவர்களை அழ வைத்த நடிகர் தாமு!… விமர்சனமும்!… தமிழக அரசின் அதிரடியும்!
90கள் மற்றும் 2000களில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த தாமு தற்போது கல்வி சேவைகள் செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றும் நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு மாணவர்கள் தேம்பி அழும் காணொளிகளை செய்திகளில் காண முடிந்தது. நடிகர் தாமு பள்ளி மாணவர்களிடம் அவர்களை படிக்க வைக்க அவர்களின் பெற்றோர் படும் கஷ்டங்கள் குறித்தும் மாணவர்கள் செய்யும் தவறுகள் குறித்தும் பேசுவதன் விளைவாக மாணவர்கள் அழுகின்றனர். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் அவர் டிரெய்னிங் எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு குற்ற உணர்வை தூண்டி அதன் மூலம் அழ வைக்கிறார் என்கிற குற்றச்சாட்டு வலுவாக எழுந்தது.
இது குறித்து உளவியல் நிபுணர்கள் கூறுகையில், "மாணவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்பதற்காகவும், தவறான பாதையில் செல்லாமல் தவிர்ப்பதற்காகவும் தான் பேசுவதாக நடிகர் தாமு கூறுகிறார். ஆனால் உண்மையில் ஒரு மாணவனை போதை பழக்கங்களிலிருந்து மீட்பது என்பது பெரிய பணி. அது தாமுவின் 45 நிமிட பேச்சால் மாறிவிடாது. பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர், பெற்றோர், சகோதர சகோதரிகள், மாவட்ட நிர்வாகம் என அனைவரின் பங்கும் இதில் இருக்கிறது.
ஆனால் தாமு தனது 45 நிமிட பேச்சால் பலரையும் மாற்றிவிடுவதாக கூறுகிறார். அதெப்படி முடியும்? ஒரு மாணவனை நல்வழிப்படுத்த அவரது குற்ற உணர்வை தூண்டும்போது, அந்த நேரத்திற்கு மட்டும் அம்மாணவர் சரியான முறையில் இருக்க முயற்சிப்பார். ஆனால் இதற்கு முன்னர் செய்த செயல்கள் இந்த குற்ற உணர்வை மீறி வந்து, 'அட போடா இனி இப்படி எல்லாம் இருக்க முடியாது' என்கிற நிலைக்கு அவரை தள்ளிவிடும். எனவே அம்மாணவன் இன்னும் மோசமான நிலைக்கு சென்றுவிடுவார்" என்று எச்சரித்துள்ளனர்.
இப்படி தொடர் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தாமுவை வைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறையின் இயக்குநர் அறிவொளி, பிபிசி தமிழ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நடிகர் தாமு அரசுப் பள்ளிகளுக்குள் வந்து மாணவர்களிடம் பேசுவதற்கு பள்ளிக் கல்வித்துறையிடம் முறையாக அனுமதி வாங்கப்படவில்லை. அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளேன். இதன்பிறகு நடிகர் தாமுவை அழைத்து அரசுப்பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்று அறிவொளி தெரிவித்துள்ளார்.