உங்க வீட்டுக்கு முன் "நோ பார்க்கிங்" போர்டு இருக்கா...? நீதிமன்றம் அதிரடி உத்தரவு...! எச்சரிக்கை கொடுத்த காவல்துறை...!
சென்னையில் வீடுகளின் முன்பாக அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ‘நோ-பார்க்கிங்’ போர்டுகளை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, தர்மபுரியைச் சேர்ந்த சி.எஸ்.நந்தகுமார் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில், தற்காலிக தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது.
சென்னையில் அடையாறு, மயிலாப்பூர், அசோக்நகர், கே.கே.நகர், வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் தங்களின் வீடுகள் முன்பாக எந்தவொரு அனுமதியும் பெறாமல் ‘நோ பார்க்கிங்’ போர்டுகளை வைத்துள்ளனர். இதன்மூலம் தங்களது வீடுகளின் முன்பாக உள்ள பொது சாலைகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என தடுத்து அவ்வப்போது தகராறு செய்து வருகின்றனர்.
சில இடங்களில் வீடுகளின் முன்பாக ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகையுடன் பூந்தொட்டிகளை வைத்தும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்கின்றனர். சென்னையில் வாகனங்களை நிறுத்த முறையான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், வாகன ஓட்டிகள் வேறு வழியின்றி தங்களது வாகனங்களை நெரிசல் மிகுந்த பகுதிகளில் நிறுத்திச் செல்ல நேரிடுகிறது. சாலைகளின் பாதுகாவலர் என்ற வகையில், சட்டவிரோத வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கும் பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
பொது இடங்களை அனுமதியின்றி முடக்குவது காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் துணையோடு நடப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பொது இடத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத பலகைகள் மற்றும் தடுப்புகளை உரிய நேரத்தில் அகற்ற கோரி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தை நாடினார். வீடுகளுக்கு முன் இதுபோன்ற போர்டுகளை வைப்பதற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை”, மேலும், அதனை மீறி வைக்கும் வீடுகளுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.