அதிரடி உத்தரவு!... கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்!
Electricity: புதிய மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மின்வாரியம், சென்னையில் பல இடங்களிலும், கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சில இடங்களிலும், தரைக்கு அடியில் கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்கிறது. மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.
புதிய மின் இணைப்பு வழங்கும் போது, வைப்புத்தொகை, வளர்ச்சி கட்டணம் போன்றவற்றை உள்ளடக்கிய பல்வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, ஒருமுறை செலுத்தக்கூடியது. கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்ய அதிக செலவாகிறது. மின் கம்பத்திற்கு செலவு குறைவு. எனவே, மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது, கேபிள் உள்ள இடங்களில் வளர்ச்சி கட்டணம் அதிகமாகவும்; கம்பம் உள்ள இடங்களில் குறைவாகவும் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, தற்போது மின்கம்பம் உள்ள இடங்களில் வீட்டிற்கு மும்முனை பிரிவில் வளர்ச்சி கட்டணம், கிலோ வாட்டிற்கு, 2,045 ரூபாயாக உள்ளது. இதுவே, கேபிள் உள்ள பகுதிகளில், 5,110 ரூபாயாக உள்ளது.
சில இடங்களில் பாதி கேபிள் வாயிலாகவும், மீதி மின்கம்பம் வாயிலாகவும் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த இடங்களில் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் இடத்தில், முழுதும் கேபிளுக்கு உரிய வளர்ச்சி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், அதிக செலவு ஏற்படுவதால் விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, ஆணையத்திற்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, 'புதிய மின் இணைப்பு வழங்கும் போது, ஒரு இடத்தில் பாதி கேபிள், பாதி கம்பத்தில் வினியோகம் செய்ய வேண்டி இருந்தால், அதற்கு ஏற்ப தனித்தனி வளர்ச்சி கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, மின் வாரியத்திற்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், 'மின் கம்பத்தில் மின்சாரம் வழங்கி, கேபிளுக்கு உரிய வளர்ச்சி கட்டணம் வசூலித்திருந்தால், திரும்ப வழங்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளது.
Readmore: பேஸ்புக் புதிய அப்டேட்! என்னனு தெரியுமா?