தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் நடவடிக்கை...! தமிழக அரசு எச்சரிக்கை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, தமிழக அரசு. 25.06.2018 நாளிட்ட அரசாணை எண்.84ல் வெளியிட்டது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகளை, அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள். தண்ணீர் பைகள் / பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது PVC விளம்பர பதாகைகள், முட்கரண்டி, கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழாய்கள், தட்டுகள் மற்றும் அழைப்பிதழ்கள், சிகரெட் பாக்கெட்டுகள் மேல் சுற்றப்பட்டுள்ள பிளாஸ்டிக் தாள்கள் போன்ற தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கினை தடை செய்துள்ளது.
பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நிலைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வழக்கமான ஆய்வுகள் மற்றும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதுவரை வாரியத்தால் தடை செய்யப்பட்ட 240 பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றை மீறி, குடியிருப்பு/வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் இணைந்து செயல்படும் மற்றும் சட்டவிரோதமாக செயல்படும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் அனைத்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை கண்டறிவது சவாலாக உள்ளது. இந்த உற்பத்தியாளர்களில் பெரும்பாலானவர்கள், எந்த அரசு துறைகளிடமும் முறையான பதிவு மற்றும் அனுமதி இல்லாமல் முற்றிலும் தற்காலிமாக செயல்பட்டு வருகின்றன.
எனவே. சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் பற்றிய விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்க வேண்டும். புகார்களை மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம், அவர்களின் தொடர்பு விவரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் (https://tnpcb.gov.in/contact.php) கொடுக்கப்பட்டுள்ளன. புகார்களை மின்னஞ்சல் / கடிதம் / தொலைபேசி அழைப்புகள் / வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.