ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ நிதி உதவி..!!
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கெய்க்வாடுக்கு ஆதரவாக ரூ.1 கோடி வழங்குமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு ஷா உத்தரவிட்டார்.
முன்னாள் இந்திய வீரரான அன்ஷுமன் கெய்க்வாட், 1975 முதல் 1987 வரை இந்தியாவுக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 சராசரியுடன் 11 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களை பதிவுசெய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 201 ஆகும்.
முதல்தர கிரிக்கெட்டில் தன்னுடைய அபாரமான ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தியிருக்கும் அன்ஷுமன், 206 போட்டிகளில் 34 சதங்கள் மற்றும் 47 அரைசதங்களும், ஆஃப் ஸ்பின்னராக 143 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். பல்வேறு நிலைகளில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ள அன்ஷுமன், தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், தனது சக வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டின் சிகிச்சைக்காக மற்ற அணி வீரர்களான மொஹிந்தர் அமர்நாத், சுனில் கவாஸ்கர், சந்தீப் பாட்டீல், திலீப் வெங்சர்கார், மதன் லால், ரவி சாஸ்திரி மற்றும் கிர்த்தி ஆசாத் அனைவரின் ஓய்வூதியத்தை சேர்த்து 50 லட்சம் வழங்கப்போவதாக தெரிவித்தார். மேலும் நோய்வாய்ப்பட்ட அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், ரத்த புற்றுநோயுடன் போராடி வரும் இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு நிதியுதவி வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். உடனடியாக ரூ. 1 கோடியை வழங்குமாறு பிசிசிஐக்கு அறிவுறுத்தினார். ஜெய் ஷா கெய்க்வாட்டின் குடும்பத்தினரிடம் பேசி நிலைமையை ஆராய்ந்து உதவி வழங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.