எமனாக மாறிய ஏசி.. குழந்தைகள் உட்பட 3 பேர் உடல் கருகி பலி..!! என்ன நடந்தது?
ராஜஸ்தான் மாநிலம் ஜாலோரில் உள்ள பின்மால் பகுதியில் ஏசி ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தின் பின்மால் நகரின் மகாவீர் சௌராஹா பகுதியில் ஏசி ஷார்ட் சர்க்யூட் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:45 மணியளவில் கவிதா (35) அவரது மகன் துருவ் (10) மற்றும் மகள் கௌரவ் (5) ஆகியோர் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கவிதாவின் கணவர் சேத்தன் குமார் தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். சேத்தன் தனது புதிய பைக்கை சர்வீஸ் செய்வதற்காக வெளியே சென்றிருந்தார், மேலும் தனது தாயை உறவினர் வீட்டில் விட்டுச் சென்றிருந்தார். வீட்டில் மூவரும் தனியாக இருந்தனர். விபத்தின் போது, தீ மளமளவென எரிந்ததால் அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததால், வெளியில் இருந்து யாரும் உதவி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அறையில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து உதவி செய்தனர். கதவைத் தட்டியபோது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, எரிந்த நிலையில் மூவரின் உடல்களையும் கண்டனர்.
சம்பவத்தின் போது அறையில் இருந்து கறுப்பு புகை வெளியேறியதாகவும், இதனால் அப்பகுதி முழுவதும் அச்சம் ஏற்பட்டதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். போலீசார் உடலை பிணமால் மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் முற்றிலும் சோகமான விபத்து என்றும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஏஎஸ்ஐ மோகன்லால் தெரிவித்துள்ளார்.
Read more ; கடல் மட்டத்திற்கு கீழே இருக்கும் மிக தாழ்வான பகுதி எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!