கண் பார்வை இழந்த ஏபி டி வில்லியர்ஸ்!… ஓய்வு காரணம் குறித்து ஓபன் டாக்!
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, தான் வலது கண் பார்வை குறைபாட்டுடன் விளையாடியதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ். கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். ஒரு நாள் போட்டியில் 2005ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8 ஆயிரத்து 765 ரன்களை குவித்துள்ளார். அதேபோல் 228 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9 ஆயிரத்து 577 ரன்கள் எடுத்துள்ளார். இவரை ரசிகர்கள் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று கொண்டாடினார்கள். அதேபோல், அதிவேக அரைசதம், சதம் மற்றும் அதிவேகமாக 150 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையெல்லாம் இவர் வசம் தான் இருக்கிறது.
இதனிடையே தான் கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் தான், 35 வயதிற்கு பின் தன்னுடைய வலது கண் பார்வை மங்கலாக தெரிய துவங்கியதால் தான் முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “எங்கள் வீட்டில் உள்ள தம்பி ஒருவர் தற்செயலாக குதிகாலால் என் கண்ணில் உதைத்தார். அதிலிருந்து நான் என்னுடைய வலது கண்ணில் பார்வை இழக்க ஆரம்பித்தேன். அதற்காக எனக்கு அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர் என்னிடம் எப்படி உங்களால் கிரிக்கெட்டில் விளையாட முடிகிறது? என்று வியப்பாக கேட்டார். அதிர்ஷ்டவசமாக என்னுடைய கேரியரின் கடைசி 2 வருடங்களில் விளையாடுவதற்கு என்னுடைய இடது கண் உதவி செய்தது.
எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்த 2015 உலகக் கோப்பை தோல்வியிலிருந்து வெளி வருவதற்கு நீண்ட காலங்கள் தேவைப்பட்டது. அதிலிருந்து வந்த பின் என்னால் பழைய ஆர்வத்துடன் விளையாட முடியவில்லை. இருப்பினும் 2018இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் கடைசியாக விளையாடுவேன் என்று நினைத்தேன், பொதுவாக என் மீது யாரும் கவனம் செலுத்துவதை நான் விரும்பவில்லை. அதனால் தான் முன்கூட்டியே ஓய்வை அறிவித்தேன்”என்று தெரிவித்துள்ளார்.