"பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி.." - மம்தாவை தொடர்ந்து காங்கிரஸ்சை புறக்கணித்த அரவிந்த் கெஜ்ரிவால்.!
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி தலைமையில் உருவாகி இருக்கும் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஆம் ஆத்மி பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் பேசிய அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என தெரிவித்து இருக்கிறார். பஞ்சாப் மற்றும் சண்டிகர் பகுதிகளில் இருக்கும் 14 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலில், பஞ்சாபில் 13 இடங்களும், சண்டிகரில் ஒரு இடமும் - மொத்தம் 14 இடங்கள் உள்ளன. அடுத்த 10-15 நாட்களில், இந்த 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனது வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த 14 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சியை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று பஞ்சாபில் உள்ள கன்னாவில் சனிக்கிழமை பேசிய கெஜ்ரிவால் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் போது பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானும் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மேடையில் இருந்தார். மேலும் அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால் நீங்கள் எந்த அளவுக்கு எங்கள் கைகளை பலப்படுத்துகிறீர்களோ அந்த அளவுக்கு நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் எங்களுக்கு 92 தொகுதிகளில் வெற்றியை கொடுத்தீர்கள். தற்போது உங்களுக்கு சேவையாற்றி வருகிறோம். இப்போது உங்கள் முன் மீண்டும் கைகட்டி நிற்கிறோம் எங்களுக்கு ஆசி வழங்குங்கள் என தெரிவித்தார்.
சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்பி சந்திப் பதக் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிட இந்தியா கூட்டணியிடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பல நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இறுதி முடிவு எட்டவில்லை என வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் ஆம் ஆத்மி கட்சி இந்திய கூட்டணியில்தான் இருக்கிறது என்பதையும் உறுதி செய்தார். அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணி பங்கீடு தொடர்பான பேச்சுக்களை விரைவில் முடிக்க கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் இருக்கும் 42 பாராளுமன்ற தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக தனது கோரிக்கைகளை நிராகரித்ததால் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். எனினும் இந்தியா கூட்டணியில் தொடர்வோம் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .