முதல்வர் மருமகனுடன் போட்டோ… திமுகவுடன் இருந்த உறவு… வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆதவ் அர்ஜுனா..!
திமுகவுக்காக தேர்தலில் பணியாற்ற பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்ததாக வீடியோ மூலம் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு, அந்த நூலை வெளியிட்டிருந்தார். அந்த விழாவில், திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்து பிறகு திடீரென விலகினார். திமுகவின் அழுத்தம் காரணமாக திருமாவளவன் கூட்டத்தில் பங்கேற்காமல் விலகியதாக விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த விழாவில் பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா "மன்னர் ஆட்சி" என்று கூறி கடுமையாக திமுகவை விமர்சித்திருந்தார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்பத்தியது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் வந்தது.
இதனையடுத்து ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார். இதனையடுத்து “விடியல் நிச்சயம் உண்டு” என்ற விசிக தலைவர் திருமாவளவனின் எழுத்துக்களையும் சேர்த்து ஆதவ் அர்ஜுனா தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்தது, பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று ஆதவ் அர்ஜுனா தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுடன் வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். அந்த வீடியோவில் முதமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் இருக்கும் புகைப்படத்தை ஆதவ் அர்ஜுனா பகிர்ந்துள்ளார்.
மேலும் முதமைச்சர் ஸ்டாலினுடன் ஆதவ் அர்ஜுனா தமது குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தையும் பிகிர்ந்துள்ளார். இதன் மூலம் திமுகவுடன் தமக்கு இருந் உறவை வெளிப்படுத்தியுள்ளார் ஆதவ் அர்ஜுனா. மேலும் திமுகவுக்காக தேர்தலில் பணியாற்ற பிரசாந்த் கிஷோரை அழைத்து வந்தது ஆதவ் அர்ஜுனாவின் ஒன் மைண்ட் இந்தியா நிறுவனமே என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.