கல்வி உதவித் தொகை பெற ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்...!
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகைக்கு ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இதில் பயன்பெற, 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் மாணவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தன் பெயரில் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களை தலைமை ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் மாணவியரின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.