ஆதார் இருந்தாலே போதும்... Voter ID இல்லாமலேயே வாக்களிக்கலாம்..!
வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டை இல்லையே என்று கவலை கொள்ள வேண்டாம். ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் போதும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர் பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்கள். இதில் சிலர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பார்கள். சிலருக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படலாம். இந்த நிலையை போக்கும் வகையில்தான், இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு,ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம், புகைப்படத்துடன் கூடிய மத்திய, மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை, எம், எம்எல்ஏ, எம்எல்சி அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், வங்கி மற்றும் அஞ்சல் பாஸ்புக், மத்திய அரசின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு இந்த 12 ஆவணங்களில் எதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறு எழுத்துப் பிழைகள் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதே நேரத்தில் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.