நிபா வைரஸ் தொற்றால் இளைஞர் உயிரிழப்பு...! இது தான் முக்கிய அறிகுறிகள்...!
கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரிசோதனையின் முடிவில் உறுதியானது.
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது பரிசோதனையின் முடிவில் உறுதியானது. ஏற்கனவே கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் ஒரு நபர் உயிரிழந்த நிலையில், நிபா வைரசால் அம்மாநிலத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:
நிபா வைரஸ் உடலில் நுழைந்த இரு வாரங்களுக்குள் நோய் அறிகுறிகள் தென்படும். சிலருக்கு அறிகுறிகள் தெரியாமலும் இருக்கலாம். தொடக்கத்தில், பாதிக்கப்பட்டவருக்கு இருமல், காய்ச்சல், தொண்டைவலி, தலைவலி, வாந்தி என பொதுவான அறிகுறிகள் இருக்கும். இவற்றைத் தொடர்ந்து நோயாளிக்கு சுவாசிப்பதில் சிரமம், வலிப்பு, குழப்பம், வாய் குழறுதல் போன்ற மோசமான அறிகுறிகள் தோன்றும்.
இந்த வைரஸால் மூளை அழற்சி உண்டாகிவிடும். இதைத் தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டு, கோமா நிலைக்குச் சென்று நோயாளி இறந்துவிடலாம். தொற்று ஏற்பட்ட இடத்தையும், அங்கு செய்யப்படும் மருத்துவ நடவடிக்கைகளையும் பொறுத்து, இறப்பு விகிதம் 40 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை அமையலாம். எனது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.