விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்கு செலுத்த வந்த பெண்ணுக்கு கத்திக்குத்து!! நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 14 ம் தேதி நடை பெற உள்ளது.
இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உட்பட மொத்தம் 29 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணி முதல் மொத்தமுள்ளள 276 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொண்ட நிலையில், T- கொசப்பாளையம் வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிப்பதற்காக காத்திருந்த கனிமொழி என்ற (49) பெண்ணிற்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
பெண்ணின் முன்னாள் கணவரான ஏழுமலை (52) கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது போலீசார் மடக்கிப் பிடித்தனர். ஏழுமலையை கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்பெண் கழுத்தில் கத்திக்குத்துபட்ட நிலையில் உடனடியாக அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பினார்.
இரட்டை கொலை வழக்கில் சிறை சென்று வந்த அவர் மனைவி கனிமொழியை பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். வேறு ஊரில் வசித்து வந்த கனிமொழி, இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த போது, வாக்குச்சாவடியில் வைத்து நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல விக்கிரவாண்டி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குளவி கூட்டால் சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குளவிகளை மருந்து அடித்து தீயணைப்புத்துறை வீரர்கள் வெளியேற்றிய பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது. தொடர்ந்து நடந்துவரும் இதுபோன்ற அசம்பாவிதங்கள், வாக்களிக்க வரும் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.