கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை..!! ஜப்பானில் உருவான புதிய தீவு..!!
ஜப்பானில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்ததன் விளைவாக, கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது.
தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமா தீவுக்கு ஒரு கிமீ தூரத்தில் உள்ள பெயரிடப்படாத எரிமலை ஒன்று 3 வாரங்களுக்கு முன்னர் வெடிக்கத் தொடங்கியது. இந்த வெடிப்பு தொடங்கிய 10 நாட்களுக்குள், எரிமலையில் இருந்து கிளம்பிய சாம்பலும் பாறைகளும், ஆழமில்லாத கடற்பரப்பில் குவிந்து, அதன் முனை கடலுக்கு மேல் உயர்ந்துள்ளது. இது, புதிய தீவு ஒன்று உருவானது போல காட்சியளிக்கிறது.
இந்த நிலம், 100 மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 20 மீட்டர் உயரம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. ஆனால், இந்த தீவு இதேபோன்று நிலையாக இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நிகழ்ந்தாலும், தீவு போன்று உருவாவது அரிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேர்மானம் குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும், உலகின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. உலகம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட எரிமலைகள் இருப்பதும், அதில் 100-க்கும் மேற்பட்ட எரிமலைகள் ஜப்பானில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.