இந்திய நாடாளுமன்றத்திற்கே அச்சுறுத்தல்... உடனே நடவடிக்கை எடுங்க..! முதல்வர் ஸ்டாலின்
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா கூறி முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியான துரிதமாக செயல்பட்ட எம்.பி.,கள் இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு உள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில்; முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடாளுமன்ற மக்களவைக்குள்ளேயே அரங்கேறியுள்ள பாதுகாப்பு மீறல் நமது மக்களாட்சியின் உயரிய கோயிலான நாடாளுமன்றத்துக்கும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி இருக்கிறது.
இதில் தாமதமில்லாத உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய விசாரணை மேற்கொண்டு, இதற்குப் பொறுப்பானவர்களைக் கண்டறிந்து, இனி இப்படி நடக்காத அளவுக்குப் பாதுகாப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தி, மக்களாட்சியின் மிக முக்கியமான அமைப்பான நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை நம்மிடம் உள்ள அனைத்து வலிமையையும் கொண்டு உறுதிசெய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.