அதிகாலையிலேயே அதிர்ச்சி!. தலைநகரில் பயங்கர தீவிபத்து!. வீடுகள் தீயில் எரிந்து சேதம்!. ஏராளமான கால்நடைகள் பலியான சோகம்!
Fire: டெல்லி ராணி கார்டன், கீதா காலனியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஏராளமான கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லி ராணி கார்டன், கீதா காலனியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தநிலையில், இன்று அதிகாலை 2.25 மணி அளவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து மளமளவென அருகில் உள்ள டயர் கிடங்குகள் மற்றும் குப்பை கிடங்குகளுக்கும் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 12 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் 8 க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சேதமானதாகவும், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீவிபத்தில் சிக்கி ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பெருமளவில் சேதமடைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். மேலும் தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.