கடவுள் சிலை இல்லாமல் வழிபாடு நடக்கும் திருக்கோயில்.. இத்தனை சிறப்புகளா..?
கோயில் என்றாலே கடவுள் சிலைகள் நிறைந்ததாக, பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் திறக்கப்பட்டு மூடப்படுவதுமாக இருக்கும். ஆனால் அம்பாடத்து மாளிகா எனும் அருள்மிகு ஐயப்பன் கோயிலில் சிலையே இல்லாமல் உள்ளது தனிச்சிறப்பு வாய்ந்த கோயிலாக பார்க்கப்படுகின்றது. இந்த கோயில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் ஐயப்பனின் சிலை இல்லாமலே பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் ஐயப்பனின் சிலைக்கு பதிலாக வெள்ளி முத்திரையிலான தடி, திருநீற்றுப்பை, கல் போன்றவற்றை ஐயப்பனாக நினைத்து அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்து வருகின்றனர். கேரளாவில் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் மகரிஷி முனிவர் ஒருவர் ஐயப்பனை நினைத்து மேலே குறிப்பிட்ட பொருட்களை வைத்து தவம் இருந்துள்ளார். முனிவருக்கு காட்சியளித்த ஐயப்பன் இப்பகுதியில் தடி, திருநீற்று பை, கல் போன்றவற்றை வைத்து பக்தர்கள் வழிபட்டு வந்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்று கூறியதன் காரணமாகவே இக்கோயிலில் சிலையில்லாமல் வழிபாடு நடக்கிறது என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் வரலாறு : அம்பாடத்டு மாளிகா குடும்பத்தை சேர்ந்த கேசவன் பிள்ளை என்பவர் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சபரிமலை சென்று வந்துள்ளார். அப்படி இருக்கையில் ஒருமுறை அவர் வயது மூப்பு காரணமாக மிக கஷ்டப்பட்ட மலையேறி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஓரிடத்தில் தங்க நேர்ந்தது. அப்போது அவர் அருகில் தங்கி இருந்த ஒரு அந்தணர், கேசவ பிள்ளையிடம் ஒரு வெள்ளி முத்திரையுடன் கூடிய ஒரு தடியையும், விபூதி பை மற்றும் கல் ஒன்றை கொடுத்து விட்டு, ‘இதோ வருகிறேன்’ என சொல்லிவிட்டு சென்றார். ஆனால் திரும்பி வரவே இல்லை.
கேசவப் பிள்ளை ஐயப்பனை வணங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் முன் வந்த அந்த அந்தணர், தடி, விபூதி பை, கல் ஆகியவை நீங்களே வைத்து வழிபடுங்கள் என கூறி மறைந்துவிட்டார். ஐயப்பன் தான் அந்தணர் வடிவில் வந்ததாக கருதப்படுகின்றது. இதனால் இன்றளவும் அந்த வெள்ளி முத்திரையுடன் கூடிய தடி, கல், விபூதி பை ஆகியவை வைத்து இன்றும் அம்பாடத்து மாளிகா ஐயப்பன் கோயிலில் வணங்கப்பட்டு வருகின்றது.
பக்தர்களின் நம்பிக்கை : இந்த ஐய்யப்பன் திருக்கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு திருமண தடை நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனி தோசத்தால் ஏற்படும் துன்பங்கள் விலகும். கணவன், மனைவி ஒற்றுமை பெருகி அனைத்து விதமான செல்வங்களும் கிடைப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும், சபரி மலை ஐயப்பன் கோயிலில் நடைபெறுவது போலவே ஒவ்வொரு மாதத்திலும் முதல் 5 நாட்களும் கார்த்திகை மாதத்தில் முதல் நாளிலிருந்து 41 நாட்கள் வரை ஐயப்பனிற்கு மண்டல பூஜை நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோயிலை போலவே வழிபாடு நடைபெற்றாலும் இக்கோயிலில் பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.