நண்பேன்டா.! 10-ஆம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம்.. 5-வது பரிட்சையில் சிக்கிய 19 வயது இளைஞர்.!
மத்திய பிரதேசத்தில், நோய்வாய்ப்பட்ட தனது நண்பனுக்காக, பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதிய 19 வயது சிறுவன் பிடிபட்டார். நான்கு பரீட்சைகளை முடித்தபின், ஐந்தாவது பரிட்சையை எழுதும் போது அவர் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது தேர்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியரில் இருக்கும் சிபிஎஸ் கான்வென்ட் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேர்வின்போது, உள்ளூர் கல்வி அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக வந்து மாணவர்களின் ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சஞ்சய் பால் என்கிற மாணவனின் வயது 17 குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய போது, அவர் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். ஹரியோம் கான்வென்ட் பள்ளியில் பயிலும் தனது நண்பர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், அவருக்கு பதிலாக தான் பரீட்சை எழுதுவதாகவும் தெரிவித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் அஜய் கட்டியார் கூறுகையில், ஆள் மாறாட்டம் செய்த அந்த நபர், முன்பே நான்கு தாள்களை எழுதிவிட்டு, இப்போது ஐந்தாவது தாளை எழுதும்பொழுது பிடிபட்டதாக தெரிவித்தார். இதை மற்ற அதிகாரிகள் ஏன் கவனிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மைய இயக்குனர் அளித்த புகாரின் பேரில், ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்த அந்த நபரின் மீது தேர்வுச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.