சவுக்கு சங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..!! நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து..!!
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா? என்ற விஷயத்தில் நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியுள்ளது.
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை சைபர் கிரைம் போலீசில், சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார். இதையடுத்து, சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கோவை, சேலம், சென்னை, திருச்சி சைபர் க்ரைம் போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக சவுக்கு சங்கர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து தனது மகனை ஒவ்வொரு ஊராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வருவதாகவும், காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த மகனுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய அடங்கிய அமர்வுக்கு முன் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா என்ற விஷயத்தில் நீதிபதிகள் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது.
தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்வதற்கு முன் வழக்கை இறுதி விசாரணைக்கு எடுக்க அவசியம் இல்லை என்று நீதிபதி பாலாஜியும், தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்யாவிட்டாலும் இன்றே இறுதி விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி சுவாமிநாதனும் தெரிவித்தார். இந்த மனு மீதான உத்தரவை பிற்பகலுக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான ஆவணங்களை பொய்யாக புனைந்து பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது புகார் சி.எம்.டி.ஏ. சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2 நாள் காவலில் எடுக்க அனுமதி கோரியிருந்த நிலையில் உத்தரவிட்டுள்ளது.
Read More : மனைவியை விவாகரத்து செய்யும் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா..? வெளியான ஷாக்கிங் காரணம்..!!