வங்கதேச அரசியலில் திடீர் திருப்பம்..!! சிறையில் இருந்து வெளிவருகிறார் முன்னாள் பிரதமர்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!
வங்கதேசத்தில் மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது. இதற்கிடையே, தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு, வங்கதேசத்தில் இருந்து வெளியேறி டெல்லி அருகே காசியாபாத்தில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை சிறையில் இருந்து விடுதலை செய்வதாக வங்கதேச அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார்.
வங்கதேச அதிபர் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் பேகம் கலிதா ஜியாவை உடனடியாக விடுவிக்க அந்நாட்டின் அதிபர் ஷஹாபுதீன் உத்தரவிட்டார். வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்குத் தலைமை வகித்தவர் தான் கலீதா ஜியா.
ஷேக் ஹசீனாவை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது 78 வயது ஆகும் நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் தான் அவரை விடுவிக்க அந்நாட்டு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கலீதா ஜியா கடந்த 1991 - 1996 வரையும், 2001 - 2006 வரை என இரண்டு முறை வங்கதேச பிரதமராக பதவி வகித்துள்ளார். அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றவர். கலீதா ஜியாவை தொடர்ந்தே ஷேக் ஹசீனா 1996ஆம் ஆண்டு முதல் முறையாகப் பிரதமரானார். இப்போது, ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இருக்கும் நிலையில், ஜியாவை சிறையில் இருந்து விடுதலை செய்வதென முடிவு எடுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More : ஒலிம்பிக் ஹாக்கி..!! அரையிறுதியில் சாதிக்குமா இந்தியா..? ஜெர்மனியுடன் இன்று பலப்பரீட்சை..!!