அதிர்ச்சி.. தலையில் ஈட்டி பாய்ந்ததில் பள்ளி மாணவன் உயிரிழப்பு..!! பயிற்சியின் போது விபரீதம்...
வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது தலையில் ஈட்டி பாய்ந்து படுகாயமடைந்த மாணவன் மூளை சாவு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடலூர் மாவட்டம்,வடலூர் பார்வதிபுரம் தர்மச்சாலைபகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் 48. இவர் நெய்வேலி உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கிஷோர்(15) பரணிக்கா(10) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் வடலூர் சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பும், மகள் பரணிக்கா ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கிஷோர் சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட ,மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான்.பள்ளி முடிந்து மாலை ஐந்து முப்பது மணி அளவில் பள்ளி திடலில் விளையாட்டுப் பயிற்சியில் வட்டி எரிதல் போட்டியில் கலந்து கொண்டு கிஷோர் விளையாடி உள்ளான். அப்போது அதே திடலில் மறுமுனையில் ஈட்டி எறிதல் போட்டி நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ஈட்டி எறிந்த போது எதிர்பாராத விதமாக கிஷோரின் தலையில் பாய்ந்து படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தான்.
அருகில் இருந்த ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவனை மீட்டு வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இந்நிலையில் நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனை சேர்க்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் டாக்டர்கள் மாணவன் மூளை சாவு அடைந்ததாக கூறியுள்ளனர் .
இதனால் மனமுடைந்த மாணவனின் தாயார் சிவகாமி நேற்று காலை ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் .
அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் பெறுவதற்கான முயற்சிகள் மருத்துவமனையில் நடந்து கொண்டிருந்த போது மாணவன் கிஷோர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிஷோரின் கண்கள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவனின் தந்தை திருமுருகன் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாக உட்பட 3 ஆசிரியர்களை வடலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் விளையாட்டு பயிற்சியின் போது ஈட்டி பாய்ந்து மூளைச் சாவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் வடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Read more ; நாட்டையே உலுக்கிய நிலச்சரிவு..!! முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?