பட்டப்பகலில் பரபரப்பு..!! நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!! உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை..!!
ஓசூரில் இளம் வழக்கறிஞர் ஓட ஓட வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பல்வேறு குற்றவியல் வழக்குகளை நடத்தி வருபவர் பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணன். இவரிடம், இளம் வழக்கறிஞர் கண்ணன் (30) என்பவர் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஓசூர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு வெளியே வரும்போது, மர்ம நபர் ஒருவர் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார்.
கண்ணன் பயத்தில் தப்பியோடிய நிலையில், ஓட ஓட அவரை விரட்டி மர்ம நபர் வெட்டியுள்ளார். பின்னர், தலையில் பலத்த காயமடைந்த கண்ணன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சம்பவ இடத்திலேயே விழுந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கண்ணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், தனியார் மருத்துவமனையில் கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, கொலையாளி அங்கிருந்து தப்பியோடி, அருகில் இருந்த JM 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்விரோதம் காரணமா? கூலிப் படையை சேர்ந்தவரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.