வெடித்தது போராட்டம்..!! நாளை நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்..!! நோயாளிகளின் நிலை என்ன..?
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த பெண் பயிற்சி மருத்துவர், கடந்த 9ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். ஆகஸ்ட் 8ஆம் தேதி இரவு பணியில் இருந்தபோது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும், பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும் மாணவர்களும், மருத்துவர்களும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி, பீகார், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா போன்ற பல மாநிலங்களும், தெலுங்கானாவில் உள்ள சில மருத்துவர்கள் சங்கங்களும் அனைத்து சேவைகளையும் முற்றிலுமாக மூடுவதாக தெரிவித்தன. பல இடங்களில் மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான், நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். நீதி கேட்டு போராடிய மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விட்டதை கண்டித்து ஸ்டிரைக் நடத்தப்படுவதாக IMA தெரிவித்துள்ளது. நாளை சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை ஸ்டிரைக் நடைபெறும் எனவும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளன. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.