சோகம்...! சென்னை வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் வெயில் தாக்கத்தால் உயிரிழப்பு..!
சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த ஒருவர் வெயில் தாக்கத்தால் உயிரிழப்பு.
சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியானது இன்று காலை11.00 - 1.00 மணி வரை நடைபெற்றது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட தேஜஸ் விமானம் உள்ளிட்ட விமானங்கள் சாகசத்தில் பங்கேற்றன. இந்த விமானங்கள் வானில் வட்டமிட்டும், செங்குத்தாக பறந்தும், இந்திய தேசியக் கொடி நிறத்தை புகைகள் மூலம் காண்பித்தும் என பல்வேறு சாகசங்கள் நடைபெற்றன.
விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சம் பேர் கண்டுக்களித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மெரினா கடற்கரையில் மட்டும் சுமார் 4 லட்சம் மக்கள் விமான சாகசங்களை கண்டு களித்தனர். ஹெலிகாப்டர்கள் தொடங்கி, மிக், மிராஜ், தேஜஸ், ரஃபெல், சுகாய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில், ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட்டன. 20 வகையான அணிகளை சேர்ந்த விமானிகள் வானை வர்ணஜாலமாக்கினர்.
இந்த நிலைகளில் நிகழ்ச்சிக்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் விளைவாக வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்டோருக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை 4 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.