ஒன்றரை மாத குழந்தைக்கு 40 இடங்களில் சூடு!… காய்ச்சலுக்கு வினோத வைத்தியம்!… ம.பி.யில் கொடூரம்!
மத்திய பிரதேசம் ஷாடோல் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் நிமோனியா காய்ச்சல் தாக்கிய ஒன்றரை மாத பச்சை குழந்தையின் உடலில் 40 முறை பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு வைத்த கொடூரம் நடந்துள்ளது.
மத்திய பிரதேசம் ஷாடோல் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் காய்ச்சலை குணப்படுத்த தீயில் பழுக்க காய்ச்சிய கம்பியால் உடலில் பலமுறை சூடு வைக்கும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஹர்தி கிராமத்தில் கடந்த 4ம் தேதி பிறந்து ஒன்றரை மாதமே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அந்த குழந்தையை உள்ளூர் செவிலியரிடம் சிகிச்சைக்காக பெற்றோர் எடுத்து சென்றனர். அப்போது தீயில் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பி மூலம் குழந்தையின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பல பகுதிகளில் அந்த செவிலியர் 40 முறை சூடு வைத்தார். பின்னர் அந்த குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடமான சூழலில் உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக ஷாடோல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து மருத்துவ கல்லூரி குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவர் நிஷாந்த் பிரபாகர் கூறுகையில், ‘அந்த குழந்தை பிறந்ததும் உடலில் சூடு வைத்துள்ளனர். பின்னர் நிமோனியா காய்ச்சலுக்காக உடலில் 40 இடங்களில் சூடு போட்டுள்ளனர். இது குறித்து மருத்துவ அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர் என்றார்.