அதி வேகமாக பரவும் புதிய வகை கொரோனா..!! எவ்வளவு ஆபத்து தெரியுமா..? நிபுணர்கள் எச்சரிக்கை..!!
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் பலமுறை உருமாற்றம் அடைந்து புதிய வகை மாறுபாடாக உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதிலும் ஒமைக்ரான், டெல்டா போன்றவை ஆபத்தானவையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனாவின் HV.1 திரிபு தற்போது அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான நோய்த்தொற்றுகளுக்கு இந்த வகை தொற்று தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, அமெரிக்காவில் 29% புதிய கோவிட் தொற்றுகள் இதன் காரணமாகவே ஏற்படுகின்றன. ஒமைக்ரானின் பேரக்குழந்தை என்று அழைக்கப்படும் இந்த மாறுபாடு, விரைவில் இங்கிலாந்தில் பரவக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஐஸ்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் முழுவதும் இந்த புதிய திரிபு கண்டறியப்பட்டுள்ளது. இது பிரான்சிலும் வேகமாக பரவி வருகிறது.
HV.1 மாறுபாடு அதிக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை எளிதாக தவிர்த்து உடலுக்கு பரவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சோர்வு, மூக்கடைப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை நெருங்கி வருவதால், இங்கிலாந்தில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை, இங்கிலாந்தில் HV.1 பாதிப்பு குறைவாகவே உள்ளன. ஆனால், விடுமுறை காலம் நெருங்கி வருவதால், பயணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, வரும் வாரங்களில் தொற்று வேகமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.