புது வகை கொரோனா..!! சாதாரணமா நினைக்காதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!! எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன்..!!
நாட்டில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பினர் முன்னாள் ஆய்வாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், ”கொரோனாவை சாதாரண சளியாக எடுத்துக் கொள்ள முடியாது. இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, நீண்டகால பிரச்சினைகளையும் உடலில் ஏற்படுத்துகிறது. மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மனநல பிரச்சனைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஏற்கனவே அதிகப்படியான நபர்களுக்கு வேக்சின் செலுத்தியுள்ளோம். கொரோனா பாதிப்பு முதலில் ஏற்பட்ட 2020 உடன் ஒப்பிடுகையில் வலுவான சுகாதார கட்டமைப்பை நாம் வைத்துள்ளோம். இப்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்தாலும் அதைச் சமாளிக்க நாடு தயாராக இருக்கும் என நம்புகிறேன்.
கொரோனா பாதிப்பு திடீரென உயர்வது இது முதல்முறை அல்ல. கடந்த 4 ஆண்டுகளில் பல முறை இப்படி நடந்துள்ளது. இப்படி தான் நடக்கும் என முன்பே தெரியும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து எச்சரித்தே வந்துள்ளது. இந்த ஜேஎன் 1 வகை கொரோனா என்பது ஒமைக்ரானின் துணை வேரியண்ட். இது லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என நம்புகிறோம். ஆனால், ஒவ்வொரு புதிய வேரியண்ட்டும் அதிகம் பரவக்கூடிய பண்புகளைப் பெறுகிறது.
இதனால் ஏற்கனவே பாதித்தவர்களையும் கூட இது மீண்டும் பாதிக்கும். உலக சுகாதார அமைப்பு ஜேஎன் 1 வகை கொரோனாவை கண்காணிக்க வேண்டிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் இப்போது கொரோனா அதிகரிக்க ஆரம்பிக்கிறது. வரும் நாட்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவே செய்யும் என நினைக்கிறேன். இப்போது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என நினைக்கிறேன். இதனால் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.
காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு மற்றும் சுவை இழப்பு ஆகியவை புதிய வகையின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை மற்றும் வாந்தி ஆகியவையும் அறிகுறிகளாக இருக்கிறது. எளிதாகப் பாதிக்கக் கூடியவர்கள் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். அதேநேரம் கொரோனா வைரஸை நாம் சாதாரண சளி அல்லது ஜலதோஷத்துடன் ஒப்பிட முடியாது. இது சாதாரண ஜலதோஷத்திலிருந்து மிகவும் வித்தியாசமானது. கொரோனா நோயாளிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, டிமென்ஷியா, மனச்சோர்வு ஆகியவை ஏற்படக்கூடும். இதனால் நாம் கொரோனாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
நாம் முன்பு எடுத்துக் கொண்ட கொரோனா வேக்சின் இதற்கு எதிராகவும் வேலை செய்யும் என்றே நம்புகிறேன். இருப்பினும் கூடுதல் பாதுகாப்பிற்கு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கூடுதலாக இப்போது ஒரு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளலாம். அது அவர்களைத் தீவிர பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்" என்று அவர் தெரிவித்தார்.