ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை..!! ரூ.24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்..!! யாருன்னு தெரியுமா..?
பேட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் படைத்துள்ளார்.
துபாயில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள 16-வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்களை வாங்க 10 அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை அதிகபட்சமாக டேரல் மிட்சல் ரூ.14 கோடிக்கு சென்னை அணியும், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு ஹைதராபாத் அணியும் ஏலத்தில் எடுத்தன.
இதுவரை ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக அந்த சாதனையை மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சல் ஸ்டார்க் முறியடித்துள்ளார். ரூ.2 கோடி அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்ட அவரது ஏலம் தொடங்கியதும் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் போட்டி போட்டன. விலை ரூ.9.6 கோடியை கடந்ததும் டெல்லி அணி பின் வாங்கியது. ஆனால், யாரும் எதிர்பாராமல் கொல்கத்தா அணி விலை கேட்டது.
குஜராத் மற்றும் கொல்கத்தா அணியிடையே நடந்த கடும் போட்டியில், ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு போன வீரர் என்ற சாதனையை மிட்சல் ஸ்டார்க் பெற்றுள்ளார்.