பெருவெள்ளத்தை தொடர்ந்து அடுத்து கிளம்பிய புதிய பிரச்சனை..!! மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!
தென் மாவட்டங்களில் மழை குறைந்து வெள்ளம் வடியத் துவங்கியுள்ள நிலையில், அடுத்து குடிநீர் பிரச்சனை தலைதூக்கியுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதேபோல் தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால் சின்னசுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேகமலை வனப்பகுதியில் நேற்று மாலை 3 மணி முதல் இன்று காலை வரை கனமழை பெய்தது. இந்த மழையால் மேகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால் அருவியில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சின்ன சுருளி அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், சின்னசுருளி அருவி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் கிராமங்களில் கலங்கலான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை காய்ச்சி பயன்படுத்தும்படி ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கனமழையால் வெள்ளக்காடான தென் கோடி மாவட்டங்களிலும் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.