அமலுக்கு வருகிறது நீட் வினாத்தாள் கசிவு தடுப்பு சட்டம்!! - குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை.. 1 கோடி அபராதம்!!
நீட் தேர்வு உட்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளில் முறைகேடு செய்தால் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அது மட்டும் இன்றி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால், இதை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மறுத்திருந்தது.
இதனிடையே, இம்மாத தொடக்கத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் படித்த 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்றதும் 1, 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு 23-ம் தேதி மறு தேர்வு நடத்துவதாகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் பீகாா் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் 13 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திய நிலையில் தற்போது புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவு தேர்வுகளில் முறைகேடுகள் செய்தால் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் குறைந்தபட்சம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லது குழுவுடன் சேர்ந்து தேர்வு நடத்தும் அதிகாரிகள், நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை செய்தால் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்துள்ளது. மேலும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; மாதவிடாய் நின்றுவிட்டதா?. பல் இழப்பு, சிறுநீரக நோய் தாக்கும் ஆபத்து!. ஆய்வில் அதிர்ச்சி!