வந்தாச்சு புதிய செயலி... வெள்ள பாதிப்பு குறித்து இனி முன்கூட்டியே அலர்ட்...! எப்படி டவுன்லோட் செய்வது...?
வெள்ள முன்னறிவிப்புகள் தொடர்பான தகவல்களை முன்னறிவிப்பாக தெரிந்து கொள்ள 'ஃப்ளட்வாட்ச் இந்தியா' மொபைல் செயலி 2.0-ஐ மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டில் அறிமுகப்படுத்தினார்.
மத்திய நீர்வள ஆணையம் உருவாக்கிய 'ஃப்ளட்வாட்ச் இந்தியா' மொபைல் செயலி 2.0-ஐ மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் நேற்று தொடங்கி வைத்தார். நாட்டில் ஏற்படும் வெள்ள நிலைமை மற்றும் 7 நாட்கள் வரையிலான வெள்ள முன்னறிவிப்புகள் தொடர்பான தகவல்களை நிகழ்நேர அடிப்படையில் பொதுமக்களுக்கு தெரிவிக்க மொபைல் செயலியின் முதல் வெளியீட்டை 2023, ஆகஸ்ட் 17 அன்று அறிமுகப்படுத்தியது.
முதலாவது செயலியில் 200 நிலை முன்னறிவிப்பு நிலையங்களில் வெள்ள முன்னறிவிப்புகள் பற்றிய தகவல்களை வழங்கியது. இரண்டாவது செயலி கூடுதலாக 392 வெள்ள கண்காணிப்பு நிலையங்களின் தற்போதைய தகவல்களை வழங்குகிறது. மொத்தம் 592 வெள்ள கண்காணிப்பு தகவல்களை அளிக்கிறது. இதனால், நாடு முழுவதும் உள்ள வெள்ள நிலைமைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. மேலும், நாட்டில் உள்ள 150 பெரிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் குறித்த கூடுதல் தகவல்களை வழங்குகிறது. இது தாழ்வான பகுதிகளில் உள்ள வெள்ள நிலைமையை நன்கு புரிந்துகொள்ள உதவும்.
அனைத்து தகவல்களையும் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வழங்குகிறது. படிக்கக்கூடிய மற்றும் ஒளி வடிவத்தில் கிடைக்கிறது. இந்த செயலி அருகிலுள்ள இடத்தில் வெள்ள முன்னறிவிப்பையும் வழங்குகிறது. 'ஃப்ளட்வாட்ச் இந்தியா' செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இது உலகளவில் பயனர்களுக்கு பரவலான அணுகலை வழங்குகிறது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் (https://play.google.com/store/apps/details?id=in.gov.affcwc) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர்(https://apps.apple.com/in/app/floodwatch-india/id6478849444) இலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.