புது வண்டியில் அடிக்கடி கோளாறு.. அலட்சியமா பதில் சொன்ன ஏஜென்சி..!! - நுகர்வோர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
புது வண்டி வாங்கிய சில நாட்களிலே அதிக கோளாறு ஏற்பட்டதால் நொந்துபோன வாகன ஓட்டி நாகர்கோவில் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெற்றுள்ளார். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பள்ளித்தெருவைச் சேர்ந்தவர் மீரா ரிஸ்வானா. இவர் தனது சொந்த தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள ரபல இருசக்கர வாகன விற்பனை ஏஜென்சி நிறுவனத்தில் இருந்து கடந்த 27-1-2023 அன்று செல்ப் ஸ்டார்ட் வசதி கொண்ட இருசக்கர வாகனம் ஒன்றை ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கப்பணம் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
அந்த வண்டியில் ஒடிக்கொண்டிருக்கும் போதே, என்ஜின் ஆப் ஆகி நிற்பது, முக்கோண எச்சரிக்கை குறியீடு ஒளிர்வது, கிக் ஸ்டார்ட் செய்யும் போது வாகனத்தில் அதிகமான அதிர்வு போன்ற பிரச்சினைகள் வந்துள்ளது. இதுபற்றி வாகனம் எடுத்த ஏஜென்சியில் சென்று 2-2-2023 அன்று கேட்டுள்ளார். மீண்டும் மீண்டும் பிரச்சனை வந்து கொண்டிருந்ததால், விரக்தியான மீரா, வேறு புதிய வாகனத்தை மாற்றித்தர கேட்டுள்ளார். இதற்கு நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனால் தனக்கு நிவாரணம் வேண்டி மீரா ரிஸ்வானா, கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் தாமஸ்சிடம் புகார் மனு கொடுத்தார். இந்த அமைப்பின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் (நீதிபதி) கிளாட்ஸ்டன் பிளஸ்டு தாகூர், உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகன ஏஜென்சி நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ஒரு மாத காலத்துக்குள் ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகையுடன், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரமும், புதிய பாகங்கள் மாற்றப்பட்டு தரமான செயல்பாட்டு நிலையில் வாகனம் ஒப்படைக்க வேண்டும். இந்த, தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டால் மொத்த தொகைக்கும் 9 சதவீத வருட வட்டியை வழங்கப்படும் நாள் வரை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Read more ; புரோ கபடி லீக் தொடர்..!! தமிழ் தலைவாஸ் – யு மும்பா அணிகள் இன்று பலப்பரீட்சை..!!