நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி...! மீனவர்கள் கடலுக்கு போக வேண்டாம்...!
நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். வரும் 25-ம் தேதி கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 26, 27-ம் தேதிகளில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் வருகிற 24ஆம் தேதி முதல் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு மட்டும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 26 முதல் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.