அடுத்த ரவுண்டு ரெடி.. வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகனமழை பெய்யும் எனவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை- தமிழ்நாடு கடற்கரையை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நெருங்கும். வலுவடைந்த காற்றழுத்தம் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கை தமிழ்நாடு நோக்கி நகர்கிறது
காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை : தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.