மீண்டுமா...? தென்மேற்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...!
தென்மேற்கு வங்கக் கடலில் நாளை ( டிச.07 ) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. டிச.12ம் தேதி இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதால் 12, 13 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பெஞ்சல்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. நேற்று, தமிழகத்தில் பரவலாக மிதமான மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மாலை திடீரென திரண்ட மேகக் கூட்டங்கள் மற்றும் மேற்கு திசை காற்றின் தாக்கத்தில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. டிச.12ம் தேதி இலங்கைக்கும் தமிழகத்திற்கும் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதால் 12, 13 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.