வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 12 – 20 செ.மீ மழைக்கு வாய்ப்புள்ளதால், ஆக.16, 17 நாட்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஆக.18, 19 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் ஆக.18, 19 ஆகிய நாட்களில் 7 – 11 செ.மீ. மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 16) நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனியில் நாளை (ஆகஸ்ட் 17) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, நெல்லை, குமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 18ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை, விருதுநகர், கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
Read More : நோய்கிருமிகள் அதிகரிக்கும்..!! இதெல்லாம் கடுமையாக பாதிக்கப்படும்..!! எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்..!!