”வாரம் ஒரு உயிர் போகுது”..!! ”இதைக் கவனிப்பதை விட அமைச்சருக்கு அப்படி என்ன முக்கியமான வேலை இருக்கு”..? அண்ணாமலை கண்டனம்
தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதுமே சுகாதாரத்துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கு போதிய அளவு மருத்துவர்கள் நியமனம் செய்யாமல் இருப்பது தான். தமிழ்நாடு முழுவதும் 1,467 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது. அனைத்து அரசுத் துறைகளிலுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தான் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொதுமக்கள் உயிருக்குப் பொறுப்பான சுகாதாரத்துறையில் கூட, போதிய மருத்துவர்களை நியமிக்காமல் இருப்பது, பொதுமக்களின் உயிரை திமுக அரசு கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது. தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைக் கவனிப்பதை விட, அப்படி என்ன முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்..? உயிர்கள் பலியான பிறகு, நீங்கள் ஆடும் நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.