இந்த பிரம்மாண்ட கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா..? தற்போதைய நிலையை நீங்களே பாருங்க..!!
நெல்லூர் மாவட்டம் பெருமாள்ளபாடு என்ற இடத்தில் உள்ள அந்த கோவிலின் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் கோவிலின் கதை என்ன? கல்கி படத்தில் காட்டப்படும் கோவில் இதுதானா? கிராம மக்கள் சொல்வது என்ன? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பெருமாள்ளபாடு என்ற இடத்தில் பெண்ணாற்றின் (Penna River) கரையில் சில ஆண்டுகளுக்கு முன் பழமையான கோவில் கண்டுபிடிக்கப்பட்டது. மணற்பாங்கான பகுதியின் நடுவில் ஒரு கோவிலின் உச்சி தெரியும். இது சிவன் கோவில் என்றும், அதனுள்ளே நாகலிங்கேஸ்வரர் இருப்பதாகவும் சோமசிலா மண்டல கோவில் அதிகாரி பென்சல வரபிரசாத் தெரிவித்தார். "அது நாகலிங்கேஸ்வர சுவாமி கோவில். ஆனால் கோவிலைக் கட்டியது யார்? எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை'' என்றார்.
இக்கோவிலின் கட்டுமானம் மற்றும் அது கட்டப்பட்ட காலம் குறித்து தெளிவான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றாலும், கோவிலின் கட்டிடக்கலை பாணி சோழர் காலத்தைச் சேர்ந்தது என வரலாற்று ஆசிரியர் எதக்கோட்டா சுப்பாராவ் கூறினார். ''கோவிலைப் பார்க்கும்போது சோழர் காலத்தைச் சேர்ந்தது போல் தெரிகிறது. சோழர்கள் 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டில் நெல்லூர் பகுதியை நோக்கி வந்தனர். கோவில் எப்படி பூமிக்குள் புதைந்தது என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. நெல்லூர் பகுதியில் கடந்த காலங்களில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், இந்தக் கோவிலும் அப்போது மூழ்கி இருக்கக்கூடும்” என தெரிவித்தார்.
பெருமாள்ளபாடு கிராமவாசிகள் சொல்வது என்ன?
பெருமாள்ளபாடுவில் உள்ளவர்களில் சிலர் கோயிலின் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளனர். பெண்ணா ஆற்றின் வெள்ளத்தில் இவர்களது ஊர் மூழ்கியதால், இப்போது இருக்கும் இடத்தில் அதே பெயரில் ஒரு ஊர் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 70 வயதான ஜெயராம நாயுடு கூறுகையில், இந்த கோபுரம் 60 ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு தெரியும் என்றும், குழந்தைகள் அங்கு விளையாடுவார்கள் என்றும் கூறினார். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, நாங்கள் இங்கே துள்ளி குதித்து விளையாடுவோம். அப்போது எங்களுக்கு கோவிலின் மேல்புறம் உள்ள குவிமாடம் மட்டும் தெரிந்தது. சிறிது காலத்தில் கோவில் முற்றிலும் மணலில் மூழ்கியது'' என்றார்.
"வெளியூரில் வேலை செய்பவர்கள் மற்றும் படிப்பவர்கள், கொரோனா காலத்தில் அவர்களாக முன்வந்து பணம் திரட்டி, ஜேசிபி மூலம் குழி தோண்டி கோவிலை கண்டுபிடித்தனர். அந்த சமயத்தில் தான் கோவில் வெளியே தெரிந்தது. அங்கு மீண்டும் கோவிலை புதுப்பித்து கட்டினால் திருடர்கள் நடமாடத்திற்கு வாய்ப்புள்ளது. அதனால் கிராமத்திற்கு அருகிலேயே கோவில் கட்டப்பட வேண்டும்" என்றார் வெங்கடேஷ்வரலு. கோவிலை எங்கு கட்டுவது என்பது குறித்து கிராம மக்கள் முடிவு செய்த பின்னர் பணிகள் தொடங்கப்படும் என வரபிரசாத் தெரிவித்தார்.
கல்கி படத்தில் வருவது இந்த கோவிலா?
கல்கி திரைப்படத்தில், தன்னை துரத்தும் வில்லத்தனமான ரோபோவிடம் இருந்து தப்பிக்கும் போது ஒரு குழந்தை மணற்பரப்பில் வழுக்கி, அங்குள்ள ஒரு கோவிலின் கோபுரத்தின் கீழே தவழ்ந்து சென்று உள்ளே ஒளிந்து கொள்ளும். அந்த காட்சியில் காட்டப்படும் கோவில் பெருமாள்ளபாடு அருகே உள்ள கோவில் என்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ண சவுத்ரி கூறுகையில், பெருமாள்ளபாடு அருகே உள்ள கோவிலில் திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்தது உண்மைதான்.
"2022ல் கல்கி திரைப்படம் இரண்டு நாட்கள் இங்கு படமாக்கப்பட்டது. படம் வெளியானதில் இருந்து, கோவிலை நேரில் பார்க்க நாலாபுறத்திலும் இருந்து மக்கள் வருகிறார்கள்" என்றார். படத்தின் கதைக்கு இந்த இடம் பொருந்திப் போனதால் இங்கு படப்பிடிப்பு நடந்திருக்கும் என்று சுப்பாராவ் தெரிவித்தார்.
Read More : கிழிந்த ரூபாய் நோட்டுக்களை எப்படி வங்கியில் மாற்றுவது..? கட்டணம் எவ்வளவு..? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு..!!