ஒலிம்பிக்கில் வரலாற்று சாதனை!. தங்கம் வென்ற நோவக் ஜோகோவிச்!. மனைவி மற்றும் குழந்தையை அணைத்து உருக்கம்!
Novak Djokovic: நோவக் ஜோகோவிச் இன்று நடந்த ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில், கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தி முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிலையில், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-6 (7-3), 7-6 (7-2) என்ற செட்களில் வென்று தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதுவரையில் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் தனது டென்னிஸ் வரலாற்றில் தற்போது ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தையும் சேர்த்துள்ளார். இதன் மூலமாக கோல்டன் ஸ்லாம் வென்ற 5ஆவது வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ஜோகோவிச் வெண்கலப் பதக்கம் மட்டுமே கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலமாக ஆண்ட்ரே அகாசி, ஸ்டெஃபி கிராஃப், ரஃபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் உடன் இணைந்து 5ஆவது வீரராக 4 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளையும், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கதையும் வென்ற வீரராக சாதனை படைத்தார். நோவக் ஜோகோவிச் டென்னிஸ் உலகில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை அவர் படைத்துள்ளார். 10 ஆஸ்திரேலியா ஓபன், 2 பிரெஞ்சு ஓபன், 7 விம்பிள்டன், 4 யுஎஸ் ஓபன் என்று 4 முக்கியமான தொடர்களில் மொத்தமாக 25 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி 7 ஏடிபி ஃபைனல்ஸ், 2 கேரியர் கோல்டன் மாஸ்டர்கள், ஒரு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஆகியவற்றை பெற்றுள்ளார்.