ஒரு கிராம் தங்கம் ரூ.7,000ஐ தாண்டும்..!! இப்போவே வாங்கிருங்க... பின்னாளில் கஷ்டம்தான்..!! எச்சரிக்கும் ஆனந்த் சீனிவாசன்..!!
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே பெரியளவில் ஏற்றம், இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ”தங்கம் குறித்து முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது. இப்போது ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,900 என்ற ரேஞ்சில் இருக்கிறது. பிரபல ஆங்கில செய்தித்தாளில் தங்கம் விலையை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி, தங்கம் விலை இப்படியே இருக்கும் என்றும் அமெரிக்க மத்திய வங்கி, தனது வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று பேச்சு எழுந்தாலே ஒரு அவுன்ஸ் தங்கம் 2,400 டாலர் வரை போகும் என்கிறார்கள்.
அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 7,000ஐ தாண்டும். நானும் இதையே தான் கூறி வருகிறேன். இந்தாண்டு இறுதியில் தங்கம் 7000ஐ தாண்டும். இல்லையென்றால் அடுத்தாண்டு தொடக்கத்தில் ரூ.7,000 அல்லது ரூ.7,200 வரை கூட விலை உயரும். தங்கத்தை வாங்கச் சரியான வாய்ப்பா எனக் கேட்பவர்களுக்குக் கண்டிப்பாக வாங்கலாம் என்பதே பதில். தங்கம் விலை ஏறும் போது தங்கம் நகைக் கடன் நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரிக்கும். ஏனென்றால், தங்கம் விலை அதிகரிக்கும் போதே அதே கிராம் தங்கத்திற்கு இந்த நிறுவனங்களால் கூடுதல் தொகையைத் தர முடியும். எனவே, தங்கம் விலை அதிகரிக்கும் போது இதுபோன்ற நிறுவனங்கள் விலையும் அதிகரிக்கும்" என்றார்.
அதேபோல அவர் மற்றொரு வீடியோவில், "தங்கம் விலை இப்போது நிலையாகவே உள்ளது. சிலர் நான் தங்கம் விலை ரூ. 4,800 வரை வரும் எனச் சொன்னதாக கூறுகிறார்கள். நான் மட்டுமின்றி எந்தவொரு நபராலும் தங்கம் விலை எத்தனை ரூபாய் குறையும் என்பதைத் துல்லியமாகச் சொல்லவே முடியாது. அப்போது இருந்த சூழலில் அமெரிக்க வட்டி விகிதம் ஏறி வந்தது. இதனால் தங்கம் விலையும் குறைந்து வந்தது. கூடுதலாக ஒரு 100 டாலர் குறைந்தால் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,800 வரும் என சொல்லி இருந்தேன். இதற்காக 5,200 ரூபாய் வந்த போதும் வாங்காமல் இருந்தால் என்ன அர்த்தம்.
எப்போது தங்கத்தைக் குறைந்தபட்ச விலையில் எல்லாம் வாங்க முடியாது. இதையெல்லாம் இறங்க இறங்க வாங்க வேண்டும். பல தடவை நான் சொல்லிவிட்டேன். இப்போதும் சொல்கிறேன் தங்கம் வாங்க இதுவே சிறந்த நேரம். தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2,500 போவது நிச்சயம் (அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் ரூ.7,325). எனவே, தாராளமாகத் தங்கத்தை வாங்கலாம்" என்றார்.