'வேகமாக பரவும் வைரஸால் உலகின் சாக்லேட் சப்ளை பாதிக்க வாய்ப்பு' ; ஆய்வில் தகவல்!
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கோகோ மரங்களில் ஒரு கொடிய வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், வரும் காலத்தில் இது சாக்லேட் உற்பத்தியை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள கோகோ மரங்களில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கத் தேவையான கோகோ பீன்ஸ் உற்பத்தி செய்கின்றன. உலகில் உற்பத்தி செய்யப்படும் சாக்லேட்டில் பாதி அளவுக்குத் தேவையான கோகோ பீன்ஸ்கள் கானா மற்றும் கோட் டி ஐவரியில் நாடுகளில் இருந்து மட்டுமே வருகிறது.
இந்தச் சூழலில் தான் கானாவில் பரவும் கோகோ ஸ்வால்லன் ஷூட் வைரஸ் நோய் என்பது கோகோ அறுவடையை 15-50% சதவிகிதம் வரை பாதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் மிகப் பெரிய இழப்பையும் சந்தித்துள்ளனர். மீலிபக்ஸ் எனப்படும் சிறிய பூச்சிகள் தான் இந்த வைரஸை பரப்புகிறது. இவை பாதிக்கப்பட்ட மரங்களை உண்ணும்போது இந்த சிஎஸ்எஸ்விடி வைரஸ் ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு பரவுகிறது.
இந்த வைரஸ் ஒரு மரத்தைத் தாக்கினால் மரம் வீங்கிவிடும். மேலும், நிறமற்ற இலைகள் மற்றும் சிதைந்த வளர்ச்சி எனப் பல வகை பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த வைரஸ் தாக்கினால் முதல் ஆண்டே பாதிக்கப்பட்ட மரங்களின் மகசூல் வீழ்ச்சி அடையும். மேலும், சில ஆண்டுகளில் மரம் மொத்தமாக இறந்துவிடும். துரதிர்ஷ்டவசமாக ஏற்கனவே சுமார் 25 கோடி மரங்கள் ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் அங்குள்ள விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக உலகின் ஒட்டுமொத்த சாக்லேட் சப்ளைக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
வைரஸ் தானே மருந்தைத் தெளித்து ஒழித்துவிடலாமே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இந்த வைரஸை பரப்பும் மீலிபக் ஒழிப்பது ரொம்பவே கடினம். இதனால் வைரஸை அழிப்பதும் மிக மிகக் கடினமான வேலையாக மாறுகிறது. இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "பூச்சிக்கொல்லிகள் மீலிபக்களுக்கு எதிராக நல்ல பலனைத் தராது.. இதனால் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அழித்து.. நோய் பரவுவதை விவசாயிகள் தடுக்க முயல்கின்றனர். ஆனால் இதையும் தாண்டி சுமார் 25 கோடி மரங்கள் இந்த வைரசால் கானாவில் பாதிக்கப்பட்டுள்ளன" என்றார்.
மரங்களுக்குத் தடுப்பூசி போடுவதும் இந்த நோய் பரவலைக் குறைக்கும். ஆனால், தடுப்பூசிக்கு அதிக செலவாகும் என்பதால் கானா விவசாயிகள் அதற்கு யோசிக்கிறார்கள். மேலும் தடுப்பூசி போடப்பட்ட மரங்களில் கூட கோகோ உற்பத்தி குறைவதாகக் கூறப்படுகிறது. மேலும், தடுப்பூசி இல்லாத மரங்களைச் சுற்றி தடுப்பூசி போடப்பட்ட மரங்களைக் கொண்டு வருவதும் ஒரு வித பாதுகாப்பைத் தருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்