மாட்டின் பால் வழியாக மனிதனுக்கு பரவும் நோய்...! உடனே இந்த தடுப்பூசி போடவும்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசிப் போடப்படவுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கன்றுவீச்சு நோய் ப்ரூசெல்லா அபார்ட்ஸ் என்ற நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. இந்நோய் பாதித்த கால்நடைகளில் கன்றுவீச்சு மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட்டு வாழ்நாள் முழுவதும் கன்று ஈனாத நிலை ஏற்படும். இந்நோய் கால்நடைகளுக்கு வராமல் தடுக்க கன்று வீச்சு நோய் தடுப்பூசி மருந்துகள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களுக்கும், கால்நடை மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இது மாடுகளிலிருந்து பால் வழியாகவும் மற்றும் நேரிடையாகவும் மனிதனுக்கு பரவும் நோயாகும். கன்றுவீச்சு நோய் தடுப்பூசியினை 4 மாதம் முதல் 8 மாதம் வயதுள்ள கிடேரி கன்றுகளுக்கு போடுவதன் மூலம் கால்நடைகளுக்கு இந்நோய் வராமல் தடுக்கலாம். இத்தடுப்பூசி ஏற்கனவே மூன்று கட்டங்களாக போடப்பட்டுள்ளது. தற்போது ப்ரூசெல்லோசிஸ் தடுப்பூசி 4 வது கட்டமாக 15.10.2024 ம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசிப் போடப்படவுள்ளது. எனவே, அனைத்து கால்நடை வளர்ப்போரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இலவசமாக தங்கள் கன்றுகளுக்கு தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.