ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை 20 மணி நேரத்துக்குப் பின் மீட்பு!
கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகாவிற்கு உட்பட்ட லச்சியான் என்ற கிராமத்தில் விவசாயத்திற்கு 30 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று தோண்டப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆழ்துளை கிணற்றின் மூடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் தான் சுமார் 2வயது குழந்தை ஒன்று இந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, தீயணைப்பு துறையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழு விரைய நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணி தொடங்கியது. குழந்தை விழுந்து குழிக்கு அருகிலேயே 21 அடி ஆழத்தில் இன்னொரு குழி தோண்டப்பட்டு அதன் வழியாக பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விஜயபுரா துணை ஆணையர் பூபாலன் கூறுகையில், “குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். குழந்தை தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டது” என்றார். மேலும்,
குழந்தை விழுந்த குழிக்கு அருகிலேயே 21 அடிக்கு இன்னொரு குழியும், பின்னர் பக்கவாட்டில் ஒரு குழியும் தோண்டப்பட்டது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தபோது இரண்டையும் இணைக்கும் பகுதியில் பாறை இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. சவால் மிகுந்தாலும் கூட இறுதியில் வெற்றி கிட்டியது” என மீட்புப் பணிகள் குறித்து காவல் துணை ஆணையர் பூபாலன் கூறினார்.