போராட்டத்திற்கு மத்தியில் வெடிகுண்டு மிரட்டல்!... டெல்லியில் அதிகரிக்கும் பதற்றம்!
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொடர் போராட்டத்தை டெல்லியில் நடத்துவதற்கு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் திட்டமிட்டனர். ’டெல்லி சலோ’ (டெல்லி நோக்கிச் செல்லுங்கள் - இது சுதந்திர போராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கம்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயச் சங்கத் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஷம்பு எல்லை (பஞ்சாப் -ஹரியானா எல்லை) வழியாகச் செல்ல முயன்ற விவசாயிகள் போலீசாரால் தடுக்கப்பட்டனர். அவர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் வீசிக் கலைக்க முயன்றனர். ஆனால் விவசாயிகள் அதிலிருந்து பின்வாங்காமல் போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்றி உள்ளே நுழைவதற்கு முயன்றவண்ணமாக உள்ளனர். இதனால் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்தநிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்மநபர்கள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிய இ- மெயிலில், இன்று (பிப்ரவரி 15) ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக பெரிய குண்டு வெடிக்கும் என்றும், எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும், அனைத்து அமைச்சர்களையும் வரவழைத்தாலும், அனைவரையும் வெடிகுண்டு வைத்து தர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
இதனை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக 2011 ஆம் ஆண்டு இதே டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது. ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.