ஒரே ஒரு போன் கால்.. 10 கோடி அபேஸ்.. இஞ்சினியரை அலற விட்ட புதுவித மோசடி..!!
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக சைபர் கிரைம் மோசடி அதிகரித்து வருகிறது குறிப்பாக டிஜிட்டல் கைது என்ற பெயரில் வயதானவர்களை குறி வைத்து மோசடி செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் 8 மணி நேரத்தில் 10 கோடி ரூபாயை இழந்திருக்கிறார் ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர்.
இந்தியாவில் சில காலமாக மோசடி சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. வயதானவர்களையும் இந்த கும்பல் விட்டு வைப்பதில்லை. நாளுக்கு ஒரு மோசடி செய்தியாவது ஊடகங்களில் வெளி வருகிறது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால் ஏமாறும் நபர்கள் லட்சக்கணக்கில் தான் தங்களுடைய பணத்தை இழக்கின்றனர். ஆள் பெயர் தெரியாத நபர்களிடம் அதிக அளவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை.
அதேபோல இன்றும் ஒரு மோசடி சம்பவத்தைப் பற்றி தான் பார்க்கவுள்ளோம். டெல்லியைச் சேர்ந்த 70 வயதான ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான 10 கோடி ரூபாய் பணத்தை இழந்திருக்கிறார்.
டெல்லி ரோகிணி செக்டார் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரிடம் 10 கோடி ரூபாயை மர்ம நபர்கள் ஏமாற்றியுள்ளனர். ஓய்வு பெற்ற பொறியாளரும் அவரது மனைவியும் டெல்லி ரோகிணி செக்டார் பகுதியில் வசித்து வருகிறார்கள். அவரது மகன் துபாயிலும், மகள் சிங்கப்பூரிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த பொறியாளரை தொடர்பு கொண்ட மர்ம நபர் தைவானிலிருந்து அவருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும் அந்த பார்சல் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பார்சலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பதாகவும் இது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் உங்களை தொடர்பு கொள்வார்கள் என கூறியுள்ளனர்.
தொடர்ந்து ஸ்கைப் வீடியோ காலில் பேசிய மர்ம நபர் ஒருவர் டிஜிட்டல் முறையில் உங்களை கைது செய்திருக்கிறோம். 8 மணி நேரத்தில் நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் இல்லை என்றால் உங்கள் வீட்டில் வந்து கைது செய்து விடுவோம் என கூறியுள்ளார். தொடர்ந்து அவரது வங்கி கணக்கிலிருந்து 10.30 கோடி ரூபாய் விசாரணை முடியும் வரை அரசு வசம் செலுத்த வேண்டும் என வங்கி கணக்கு விவரங்களையும் கொடுத்திருக்கிறார். அவர் பணத்தை மாற்றியதும் அந்த இளைஞர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டு நம்பரை பிளாக் செய்துள்ளனர். இதை அடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புகார் அளித்தார். தொடர்ந்து இதுகுறித்து டெல்லி சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more ; டெபிட் கார்டு இல்லாமலே UPI பின்னை அமைக்கலாம்.. எப்படி தெரியுமா?